அடடே.. பிரச்னயே இல்லாம இந்த வருசம் நிறைய லீவு போடலாம்! எப்படி தெரியுமா?

0
32

எப்ப பாத்தாலும் வேலை. கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா விடவே மாட்றாங்கப்பா. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு எங்கயாச்சும் பயணம் போய்ட்டு வரணும்னு தோணுதா.

ஆனா அதுக்கு மேலதிகாரி எங்க சம்மதிக்குறாரு.. விடுப்பு எடுக்கவே முடியாது. அப்படியே எடுத்தாலும் ரெண்டு நாளுக்கு மேல கிடைக்கவே கிடைக்காது. அதுதான உங்க சிக்கல். வாங்க நாங்க ஒரு நல்ல யோசனை சொல்றோம். சும்மா சிட்டா பறந்து போங்க சுற்றுலாவுக்கு….

ஜனவரி

இந்த வருடத்தின் முதல் மாதமே நமக்கு ஜாக்பாட் அடித்தமாதிரிதான். தமிழர்களின் மாதமாக கொண்டாடப்படும் இந்த மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் விடுமுறைதான். தமிழர் திருநாளுக்கு பல்க்காக லீவு போட்டு ஊருக்கு சென்றுவிட்டு வந்தீர்களா?

நல்ல வேளை கடைசி நேரத்தில் பேருந்து ஊழியர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டு, போக்குவரத்து சீராக்கப்பட்டது. இல்லையென்றால்… இல்லைனா என்ன இன்னு ரெண்டு மூனு நாளு சேர்ந்து லீவு போட்ருக்கலாம். சரி விடுங்க எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி செஞ்சமாதிரி பேருந்து கட்டணத்தையும் உயர்த்திவிட்டாங்களே..

சுற்றுலா செலவு அதிகரிக்கப் போகிறது என்று கவலைப் படாதீங்கப்பா. அதுக்கும் சில வழிகள் இருக்கு.. இப்பத்தான் லாங்க் லீவ் முடிஞ்சி ஆப்பிஸ் வந்தாப்ல இருக்குது. அதுக்குள்ள அடுத்த லீவுக்கான நாள் நெருங்கிடிச்சி.. ஆமாங்கோ.. ஜனவரி 26 என்ன நாள் நினைவிருக்குல.. குடியரசு நாள். வெள்ளிக்கிழமை வருது.. சனிக்கிழமை மட்டும் லீவு போட்டா போதும் மூனு நாள் அம்சமா கொண்டாடிடலாம்.

ஆலி

ஜனவரி மாதம் செல்லவேண்டிய இடங்கள் நிறைய இருந்தாலும், ஆலி அப்படிங்குற இடம் நாங்க உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். சர்வதேசப் புகழ் பெற்ற பனிச்சறுக்கு உலகம் அதுவாகும். உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி!

கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைப் படி ஆதி சங்கராச்சார்யா இந்த இடத்திற்கு வருகை புரிந்துள்ளார். ‘புல்வெளி’ என்று வட்டார மொழியில் பொருள் தரும் ‘புக்யால்’ என்ற பெயரிலும் இந்த பகுதி அழைக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியின் மூடுபனி நிரம்பிய சரிவுகளில் நடந்து செல்லும் வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் நந்தா தேவி, மனா பர்வதம் மற்றும் காமட் மலைத்தொடர்களின் மலைக்கச் செய்யும் காட்சிகளைக் காண முடியும். மேலும், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் தியோதர் மரங்களின் அணிவகுப்பையும் இந்த சரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்

பிப்ரவரி

பிப்ரவரி மாசம் சிவராத்திரி வருதே. அடடே.. நமக்குத்தான் லீவு தரமாட்டாங்களே.. ஆமாங்க.. ஆனா இந்தியாவுல தமிழ்நாட்ட தவிர மத்த இடங்கள்ல இருக்குறவங்களுக்கு இந்த நாள் விடுமுறை. பிப்பிரவரி மாதம் 13ம் தேதி வருது மகா சிவராத்திரி.. அப்ப பிப்பிரவரி 12ம் தேதி லீவு போட்டீங்கன்னா… சனி. ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நான்கு நாட்கள் ஜமாய்தான். அப்றம் என்ன கிளம்பிடவேண்டியதுதான..

நாசிக்

நாசிக் நகருக்கு வெகு அருகில் இருக்கும் திரிகம்பேஸ்வர் கோயில் இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். முக்திதம் என்ற மற்றொரு கோயில் அங்குள்ள ஜோதிர்லிங்கங்களுக்காக இந்தியா முழுவதுமே அறியப்பட்ட ஒன்றாகும்.

இங்கு ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் சாரங்கள் சுவற்றில் நுட்பமாக பொறிக்கப்பட்டுள்ளன. கருங்கல்லால் கட்டப்பட்ட கலாராம் கோயில் இங்கு பக்தர்களால் விரும்பப்படும் மற்றொரு கோயிலாகும். நாசிக் அருகில் உள்ள பஞ்சவடி எனும் இடத்தில் உள்ள சீதா குபா ராமாயண காவியத்தின் பல சம்பவங்களுடன் தொடர்புடைய இடமாகும். இது அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

மார்ச்

வண்ணங்கள் பூசும் கொண்டாட்டம் நிறைந்த ஹாலிடேல ஹோலி பண்டிகைய ஜாலியா கொண்டாடுங்க. மார்ச் 2ம் தேதி வர்துங்க ஹோலி. வெள்ளிக்கிழமை.. அப்பறம் சனி, ஞாயிறு சேர்ந்தாப்ல லீவு போட்டுவிட்டா, ஜாலியா டூர் போகலாம். அதுமட்டுமில்லைங்க.. அடுத்து மார்ச் 30ம் தேதி புனித வெள்ளி வருது. வெள்ளி, சனி, ஞாயிறு.. சும்மா ஜாலியா…. எப்படி என்ஜாய் பண்றதுனு பிளான் பண்ணுங்க.. எப்படி போறது, எங்க போறதுனு நாங்க சொல்றோம்..

விருந்தாவன்

யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம் என்று பாராட்டப்படும் ஒரு இடத்துக்கு இந்த மாத பயணத்தைத் திட்டமிடுங்கள். முன்னரே குறிப்பிட்டுள்ளதுபோல் விருந்தாவன் நகரம் 5000 கோயில்களை கொண்ட யாத்திரைத்தலமாக புகழ் பெற்றிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை மிகப்புராதனமான கோயில்களாகும்.

மேலும் பல கோயில்கள் முகலாயர் காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஔரங்கசீப் மன்னரால் பல கோயில்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்றும் நிலைத்திருக்கும் கோயில்கள் கிருஷ்ணரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட கதைகளை பிண்ணனியில் கொண்டுள்ளன.

பங்கே பிஹாரி கோயில், ரங்க்ஜி கோயில், கோவிந்த் தேவ் கோயில் மற்றும் மதன் மோகன் கோயில் போன்றவையும் இங்கு அமைந்துள்ள இதர முக்கியமான கோயில்களாகும்.

ஏப்ரல்

ஏப்ரல் மாசம் கொஞ்சம் போர்தானுங்க.. அவ்ளவா லீவே இல்ல. கட்டக்கடைசியில ஏப்ரல் 29 புத்தபூர்ணிமா வருதுங்க.. அதுவும் திங்ககிழம. சனி, ஞாயிறு, திங்கள் னு மறுபடியும் ஒரு ஆஃபர் இருக்குது.

மான்

ஏப்ரல் மாதம் கன்யாக்ஸ் மக்களின் விழாக்காலம் ஆகும். இந்த மாதத்தில் எவோலியோன்க் மான்யு என்று ஒரு பெரிய விழாவைக் கொண்டாடுவர். ஒரு வாரம் நடைபெறும் இந்த விழா அறுவடை விழாவாக அல்லது வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகக் கொண்டடப்படுகிறது. மான் பகுதிக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் ஏப்ரல் மாதத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்.

மே

மே 1 உழைப்பாளர் தினம். அட அதுவும் திங்கக்கிழமை. வாங்க கொண்டாடுவோம். வருசம் பூரா ஹார்டு வொர்க் பண்ணின நம்ம டூர் போகாம வேற யாரு போறது. உங்க உயர் அதிகாரிக்கிட்ட சண்ட போட்டாச்சும் லீவு வாங்கிட மாட்டீங்க.. வீட்ல சின்னஞ்சிறுசுகள்லாம் வெக்கேஷன் லீவுல இருப்பாங்க..

வெளிய கூட்டிட்டு போ னு அடம்பிடிப்பாங்க.. அந்த பிஞ்சி கொழந்தைங்கள பாட்டு கிளாஸ், டான்ஸு கிளாஸுனு அனுப்பி டார்ச்சர் பண்ணி ஒரு மெஷின் வாழ்க்கைய தர விரும்புறீங்களா? உலகத்த சுத்திக்காட்டி இயற்கைய நேசிக்க வைக்க போறீங்களா?

காங்க்டோக்

மே மாதத்தில் நீங்கள் செல்லவேண்டிய ஒரு இடம் இதுவாகும். நீங்கள் அந்த அளவுக்கு சுற்றுலா ஈடுபாடு கொண்டிருந்தால் நிச்சயம் இது நல்ல அனுபவத்தைத் தரும். கடல் மட்டத்திலிருந்து 1678 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த மலைநகரத்தின் ஒரு சரிவில் கவர்னர் மாளிகையும் மறுபுறச்சரிவில் புராதன அரண்மனையும் கம்பீரமாக வீற்றுள்ளன.

ரோரோ சு மற்றும் ராணிகோலா எனும் ஓடைகள் முறையே கிழக்கும் மேற்கும் காங்க்டாக் நகரத்தை சூழ்ந்துள்ளன. நகரத்துக்கு தெற்கே ஓடும் ராணிபால் ஆற்றில் இந்த இரு ஓடைகளும் கலக்கின்றன. காங்க்டோக் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் இதர மலைச்சரிவுகள் அடிக்கடி நிலச்சரிவை சந்திக்கும் இயல்பை கொண்டுள்ளன. பிரிகாம்பிரியன் பாறைகள் எனப்படும் தகட்டு அடுக்குகளை கொண்ட மெல்லிய பாறைவகைகளால் இம்மலைகள் உருவாகியிருப்பதே இதற்கு காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஜூன்

இஸ்லாமிய சகோதரர்களுக்கு சிறந்த நாளான ரமலான் பண்டிகை ஜூன் 15ல வருது..அதுவும் வெள்ளிக்கிழமை. அப்ப மறுபடியும் ஜாலியோ ஜிம்கானாதானுங்களே. ஜீன் 15, 16, 17 ஆகிய நாள்கள்ல ஷார்ப்பா ஒரு பிளான போட்டு, குடும்பத்தோட ஜாலியா ஒரு சுற்றுலா கிளம்பி போய்ட்டுவாங்க..

தென்னிந்தியாவின் காஷ்மீர்

கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும்

கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம். கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பல கிறிஸ்துவ ஆலயங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். ப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது.

சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல். இங்கே வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜூலை

மொதல்ல எல்லாரும் கூடி பேசி, இந்த ஜூலை மாசத்துக்கு எதுனாச்சும் லீவு உடமுடியுமானு பாத்து சட்டம் போட சொல்லணும். லீவே இல்லிங்க.. இப்டி போனா ஒரு மனுசன் எப்டி வேல செய்யுறதுனு நீங்க நினைக்குறது இங்க வரைக்கும் கேக்குது. இருந்தாலும் உங்க மன தைரியத்தக் கொண்டு வீக்கெண்ட் நாள்களில் அருகிலுள்ள இடங்களுக்கு பயணம் போங்கன்றேன்.

மலர்ப்பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு பூங்கா மிக அழகான மலர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த தேசிய பூங்காவில் கருப்பு கரடிகள், பனி சிறுத்தைகள், பழுப்பு கரடிகள் மற்றும் நீல ஆடுகள் ஆகியன உள்ளன. புகழ்பெற்ற நந்தாதேவி பூங்கா இங்குதான் இருக்கிறது. ஜூலை மாதம் இங்கு செல்வது மிகச் சிறந்த ஒரு அனுபவமாக அமையும்.

ஆகஸ்ட்

நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஏன்னா இந்த மாசம் நம்ம நாடு சுதந்திரம் வாங்குன மாசம். காந்தி, நேரு புகழையும், நேரு, நேதாஜி சண்டையும் கலை கட்டும் சமூக வலைத்தளங்கள்ல.. ஆனா யாராச்சும் உண்மையான போராளிங்கள மனசுல நினைச்சி உண்மையிலேயே நம்ம சுதந்திரத்த கொண்டாடுறோமான்னா அது கேள்விக்குறிதான். அந்த நாள் பாத்து ஒரு டிவில ஜெய்ஹிந்த் படமும், இன்னொரு டிவில விஜயகாந்த் படமும் போடுவாங்க,.,.

அப்றம் வரலாற்றில் 72வது முறையாக பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிக் காக்கிறோமா என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றமும் போடுவாங்க. அதையெல்லாம் விடுங்க.. நம்ம ஜாலியா சுற்றுலா போகலாம் வாங்க.. ஆகஸ்ட் 13,14 லீவு போடுங்க.. அப்றம் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வரைக்கும் லாங்க் டூர் போகலாம். அடுத்த பக்ரீத் பண்டிகையும் வருது நினைவுல வச்சிக்கோங்க.

ஸ்பித்தி

உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளுக்கு மத்தியின் புராதனத்தின் எழில் வடிவமாக காட்சியளிக்கும் இந்த மடாலய ஸ்தலத்தில் கால் பதிக்கும் நாம் மீண்டும் பிறந்தவர்களாவோம். அப்படி ஒரு தூய்மையான கன்னிமை கெடாத இயற்கைச்சூழலின் மத்தியில் மஹோன்னத கலைச்சின்னமாக இந்த மடாலயம் வளாகம் வீற்றிருக்கிறது. இப்பகுதியின் இயற்கை எழிலில் கவரப்பட்டு பல திரைப்பட இயக்குனர்கள் இங்கு படப்பிடிப்பு செய்துள்ளனர்.

பாப் மற்றும் மிலாரேபா போன்ற பாலிவுட் படங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஸ்பிதி பகுதியில் காசா மற்றும் கீலாங் என்ற முக்கியமான நகரங்கள் உள்ளன. அது மட்டுமன்றி சில அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பட்டாணி போன்ற தானியங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

செப்டம்பர்

கிருஷ்ண ஜெயந்திதான் ஞாயிற்றுக்கிழம வந்து நமக்கு லீவு தராம பண்ணிடிச்சி. ஆனா விநாயகர் சதுர்த்தி நம்மள கைவிடல பாஸ். அது செப்டம்பர் 13 வியாழக்கிழமை வருது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்ந்து விடுப்பு போட்டுட்டு ஊர் சுற்றலாம். அப்றம் செப்டம்பர் 29, 30 ம் ஒரே கொண்டாட்டம்தான்.

வயநாடு

இந்தியாவின் தொல் பழங்குடி இனமக்களை வயநாடு பகுதியின் பசுமையான மலைகள் இன்றும் பாதுகாத்து வருகின்றன. இவர்கள் பெரும்பான்மை நாகரிக சமூகத்தோடு கலக்க விரும்பவில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே அவர்களுக்கு ஏற்றதாகவும் பிடித்தமானதாகவும் உள்ளது. அது ஏன் என்பதை வயநாடு பகுதிக்கு விஜயம் செய்யும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

ஏனெனில் இப்பகுதியை விட்டுப்பிரிய உங்களுக்கே மனம் வராது. இங்குள்ள மலைக்குகைகளில் கற்கால சுவர் ஓவியங்கள் (கீறல் ஓவியங்கள்) காணப்படுவதால் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் பிடித்த ஸ்தலமாக இது திகழ்கிறது.

கற்காலத் துவக்கத்திலேயே இப்பகுதியில் ஆதி மனித நாகரிகம் செழித்திருந்ததற்கு இந்த பாறைச்சித்திரங்கள் சான்றுகளாக விளங்குகின்றன. தற்காலத்தில் வயநாடு பிரதேசமானது அழகிய இயற்கை காட்சிகளுடனும், வளைந்து நெளிந்து காணப்படும் பச்சை பஞ்சுப்பொதி போன்ற ரம்மியமான மலைகளுடனும், செழுமையான பாரம்பரியத்துடனும் காட்சியளிக்கும் நவநாகரிக இயற்கைப்பூமி எனும் புகழுடன் விளங்குகிறது.

அக்டோபர்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வருது. அதுவும் செவ்வாய்கிழமை வருது.. அப்றம் விஜயதசமி விடுமுறை அக்டோபர் 19, 20,21 ஜாலிதான…

அந்தமான்

நீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள ‘ஹேவ்லாக்’ தீவின் ‘ராதாநகர்’ கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக ‘டைம்’ பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த ‘ஹேவ்லாக்’ கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று. அந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் ‘ஜாலிபாய் தீவு’ ஆகும்.

மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ (தேசிய கடற்பூங்கா) அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்’ என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர்

நவம்பர் 7ம் தேதி வர்ற தீப ஒளித்திருநாள் புதன்கிழமை வருது. அப்படின்னா வியாழன் வெள்ளி லீவு போட்டா முழுசா 5 நாள் லீவு உங்க பாக்கெட்ல. ஒரு சூப்பர் டூருக்கு பிளான் பண்ணி ஜமாய்க்கலாமே.

குடகு

கூர்க் பகுதியில் பலவிதமான வரலாற்று சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், புராதன கோயில்களும், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும் சரணாலயங்களும் போன்ற எண்ணற்ற எழில் வாய்ந்த இடங்களும் ஸ்தலங்களும் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.

குறிப்பிடும் படியாக இங்கு அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ராஜா சீட், நலநாடு அரண்மனை மற்றும் கடிகே (ராஜா சமாதி) போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. மற்றும் இந்த பிரதேசத்தில் ஆன்மீக சார்ந்த முக்கிய ஸ்தலங்களாக பாகமண்டலா, திபெத்திய தங்க கோயில், ஓம்காரேஸ்வரா கோயில் மற்றும் தலைக்காவிரி போன்ற இடங்கள் காணப்படுகின்றன.

இயற்கை எழிலை ரசிப்பதற்கு தோதான இடங்களாக செலவரா நீர்வீழ்ச்சி, ஹரங்கி அணை, காவேரி நிசர்கதாமா, துபரே யானை காப்பகம், ஹொன்னம்மன ஏரி மற்றும் மண்டல பட்டி போன்ற இடங்களும் காட்டுயிர் ஆர்வலர்கள் விரும்பும் இடங்களாக நாகர்கோல் தேசிய பூங்கா மற்றும் அருகிலுள்ள பண்டிபூர் தேசிய பூங்கா ஆகியவையும் இயற்கை எழில் சார்ந்த அம்சங்களுடன் காணப்படுகின்றன.

டிசம்பர்

டிசம்பர் மாசம் எதுக்குங்க லீவுலாம். மாசம் பூராவுமே கொண்டாட்டம்தானுங்களேனு கேக்கலாம். அமெரிக்காவுல வேல செய்யுறவங்களுக்கெல்லாம் இந்த மாசமே கொண்டாட்ட மாசம்தான். அந்த பாக்கியம் இல்லாதவங்களுக்கு டிசம்பர் 25 கிறிஸ்துஸ் ல ஆரம்பிக்குற கொண்டாட்டம் மறு ஆண்டு பிறக்கும் வரை நீடிக்கும். ஆனா இந்த தடவ அதுக்கு முன்னாடியே டிசம்பர் 22, 23 சனி, ஞாயிறு விடுமுறை வருது. அப்ப திங்க கிழமை மட்டும் லீவு போட்டா போதும்ங்க்றேன் நான்.

வர்கலா

வர்கலா நகரமானது புகழ்பெற்ற ஹிந்து மற்றும் இஸ்லாமிய யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், கடுவாயில் ஜும்மா மசூதி, வர்கலா பீச், பாபநாசம் பீச், கப்பில் ஏரி, அஞ்செங்கோ ஃபோர்ட், வர்க்கலா சுரங்கப்பாதை, சிவ பார்வதி கோயில் மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.

வர்கலா பகுதியில் பல நீரூற்றுகளும் காணப்படுவதால் இந்த இடம் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது.

வர்கலா கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகிலேயே உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரி எனும் நீர்த்தேக்கப்பகுதியும் அமைந்துள்ளது.

LEAVE A REPLY