நீங்க யார சொல்றீங்களோ அவங்கள டீம்ல சேர்த்து ஆடுறோம், சரிங்களா? நிருபர்களிடம் சீறிய கோஹ்லி

0
28

எது சிறப்பான 11 பேர் கொண்ட அணி என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள் என நிருபர்களிடம் சீறினார் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தோற்ற நிலையில், செஞ்சுரியனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா மீண்டும் தோற்றது.

நேற்றைய போட்டி நேரத்திற்கு பிறகு நிருபர்கள் கோஹ்லியிடம் கேள்விகளை எழுப்பினர்.

பெஸ்ட் 11 பேர் அணி

அப்போது நிருபர் ஒருவர், பெஸ்ட் 11 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என நினைக்கிறீர்களா என கேட்டார். அவ்வளவுதான், கோஹ்லிக்கு வந்தது பாருங்கள் கோபம். நிருபரிடம் பல கேள்விகளை எதிர்த்து கேட்க ஆரம்பித்துவிட்டார். “எது பெஸ்ட் 11?” என்று திருப்பி கேட்டார் கோஹ்லி.

விமர்சனங்கள்

இந்திய பிட்சுகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சுகளில் களமிறக்கியது விமர்சனங்களை எழுப்பியிருந்தது. இதைத்தான் நிருபர் கேள்வியாக எழுப்பியிருந்தார். குறிப்பாக வெளிநாடுகளில் சிறப்பாக ஆடும் ரஹானேவுக்கு பதில் ரோகித் ஷர்மாவை களமிறக்கியது உள்ளிட்டவை இந்த கேள்விக்கு காரணமாக அமைந்தது.

நீங்களே சொல்லுங்கள்

“ஒருவேளை நாங்கள் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தால், இது பெஸ்ட் 11 வீரர்கள் கொண்ட அணியாக இருந்திருக்குமா? நாங்கள் ரிசல்ட்டுகளை வைத்து 11 பேர் அணியை தீர்மானிப்பதில்லை. நீங்கள் பெஸ்ட் 11 வீரர்களுடன் களமிறங்கியிருக்கலாம் என கூறுகிறீர்கள், அப்படியானால், நீங்களே அந்த வீரர்கள் யார் என்பதை கூறிவிடுங்கள்” என பொரிந்து தள்ளிவிட்டார் கோஹ்லி.

சரியான முடிவு

தோல்வி என்பது வருத்தம் அளிக்க கூடியது. ஆனால் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் நீங்கள் இதற்கு சரிபட்டு வரமாட்டீர்கள் என கூறிவிட முடியாது. பெஸ்ட் 11 வீரர்களை வைத்து ஆடியபோது இந்தியா தோற்றதே கிடையாதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் கோஹ்லி.

வெற்றிகள்

34 டெஸ்ட் போட்டிகளில் எத்தனை போட்டிகளை நாங்கள் வென்றுள்ளோம் தெரியுமா? 21 வெற்றிகள் (உண்மையில் 20 வெற்றிகள்), 2 தோல்விகள் அடைந்துள்ளோம். எத்தனை டிரா ஆனது தெரியுமா? எங்கு விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். நான் இங்கு பதில் சொல்ல வந்தேன். உங்களிடம் சண்டை போட வரவில்லை. இவ்வாறு கோஹ்லி நிருபர்களிடம் சீறியபடி பதிலளித்தார்.

LEAVE A REPLY